குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதில் காட்டும் அக்கறையை, அவர்களின் சிறிய நல்ல செயல்களைப் பாராட்டுவதிலும் காட்டுகிறோமா? குழந்தைகளின் வளர்ச்சியில் கண்டிப்பைவிட நம்பிக்கையும் ஊக்கமும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?
மாண்பைக் கொண்டாடுங்கள்; மாண்பான சொற்களைப் பயன்படுத்துங்கள்!
குழந்தைகள் அடம்பிடிக்கும்போதும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும்போதும், அவர்கள் நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களைக் கண்டிக்கிறோம். ஆனால், அவர்கள் செய்யும் சிறிய நல்ல செயல்களைக்கூட நாம் கொண்டாடுகிறோமா?
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் சிறு சிறு நல்ல செயல்களையும் பாராட்ட வேண்டும். அவர்களின் திறமைகள் மீதும் முயற்சிகள் மீதும் நம்பிக்கை வைத்து, அன்பான சொற்களால் ஊக்கப்படுத்த வேண்டும். நாம் அவர்களிடம் நம்பிக்கையுடன் பேசும்போதும், நம்பிக்கையோடு செயல்பட வாய்ப்பளிக்கும்போதும், அவர்களுக்குள் நல்ல மாற்றங்களும் புதிய உற்சாகமும் உருவாகின்றன.
மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது. நம்முடைய அன்பும் நம்பிக்கையும் ஊக்கமும் குழந்தைகளைப் படிப்படியாக மாற்றும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதுபோல, எப்போதும் குழந்தைகளின் குறைகளையே சுட்டிக்காட்டினால், அவர்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்லக்கூடும். ஆனால், அவர்களின் முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் கொண்டாடும்போது, அவர்கள் நம்மை நம்பி நெருங்கி வருவார்கள்.
குழந்தைகள் வளர்வதற்குத் தண்டனையைவிட நம்பிக்கையும், குற்றம் சுட்டிக்காட்டுவதைவிட ஊக்கமும், ஒப்பீடுகளைவிட அங்கீகாரமும் அவசியம்.
பெற்றோர்களே! ஆசிரியர்களே! குழந்தைகளின் குறைகளை மட்டும் பார்க்காதீர்கள்; அவர்களிடம் இருக்கும் மாண்புகளையும் கண்டறிந்து கொண்டாடுங்கள்.
நாம் அவர்களிடம் விதைக்கும் நம்பிக்கை, நாளை அவர்களுடைய தன்னம்பிக்கையாக மலரும்! 🌱

Comments
Post a Comment